குடிபோதை குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

குடிபோதையால் நடைபெறும் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வருகிற 25-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-04 22:00 GMT
சென்னை, 

குடிபோதையால் நடைபெறும் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வருகிற 25-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பொறுப்பு

குடிபோதையில் நடந்த தகராறில் 2 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், கோவையைச் சேர்ந்த வேலுசாமி, சசிக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி ஏற்கனவே உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தை பொறுத்தவரை மதுபோதையில் கொலை, கொள்ளை, விபத்து என்று ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. அதுவும் குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மதுபோதையே காரணம். எனவே, மதுபோதையினால் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும், மதுவை விற்பனை செய்யும் தமிழக அரசே ஏன் பொறுப்பாளியாகக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று கூறிய நீதிபதி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

நீதிபதி அதிருப்தி

இந்த வழக்கு நீதிபதி ஏ.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மதுபோதையினால் ஏற்படும் குற்றங்களுக்கு அரசு ஏன் பொறுப்பு ஏற்கக்கூடாது? என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்‘ என்று கருத்து கூறினார்.

பின்னர், குடிபோதையால் நடைபெறும் குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனி திட்டத்தை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை வருகிற 25-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்