20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் தி.மு.க. போட்டியிடுகிறது- டிடிவி தினகரன்
20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் தி.மு.க. போட்டியிடுகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
வருமான வரித்துறை அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின்படி சோதனை செய்தால் தவறு இல்லை. அதே நேரத்தில் திட்டமிட்டு எதிர்க்கட்சி வேட்பாளர்களை மட்டும் குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறதோ என்கிற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் இருக்கிறது.
தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சி பணம் கொடுப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தும் தோல்வி அடைந்தனர். ஆனால் டோக்கன் என்று கூறுவார்கள்.
டோக்கன் கொடுக்கிறோம் என்று பொய்யான தகவலை சொன்னார்களே தவிர, உண்மையில் அந்த தேர்தலின்போது பணம் கொடுத்தவர்கள் ஆளுங்கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனையெல்லாம் தாண்டி ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள்.
குறிப்பாக சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது தேர்தல் நடந்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் வேட்பாளர் வீட்டில் இவர்களே பணத்தை வைத்து பிடிக்க வைத்து தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக தகவல்கள் வருகிறது.
துரைமுருகன் வீடு, குடோன், அவரது உதவியாளர் வீடு ஆகிய இடங்களில் இருந்துதான் பணம் எடுத்ததாக சொல்கிறார்கள். இந்த இடங்கள் எல்லாம் துரைமுருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்கள் தானே. எல்லா இடத்திலும் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள்.
பணம் பிடிபட்ட பிறகு எங்களுக்கு தெரியவில்லை என்று கூறுகிறார்கள். நீலகிரி தொகுதியில் கூட பண மூட்டையுடன் ஒருவர் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
20 தொகுதிகளில் பணத்தை நம்பித்தான் தி.மு.க. போட்டியிடுகிறது. ஓட்டுக்கு ரூ.500-1000 கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை தாண்டி பணம் கொடுக்க ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதனால் இந்த வருமான வரிச் சோதனையை தேர்தலை நிறுத்துவதற்கான சதியாக நான் பார்க்கவில்லை. துரைமுருகனுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில்தான் பணம் பிடிபட்டிருக்கிறது.
அரசை காப்பாற்றிக் கொள்ள இதுபோன்ற திட்டங்களை நிச்சயம் தீட்டுவார்கள். இதனைத் தாண்டியும் திட்டம் தீட்டுவார்கள். தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி அடையும் என்று தெரியும்.
உளவுத்துறை முதற்கொண்டு அவர்கள் கையில் இருப்பதால் மற்ற வேட்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இவர்களே பணத்தை வைத்து எடுக்க வைத்து தேர்தலை நிறுத்த முயற்சி செய்வார்கள். குறிப்பாக எங்கள் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சொல்லி வருமான வரித் துறையை அனுப்பி பணத்தை எடுக்கலாம்.
அனைத்துவிதமான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ய மத்திய- மாநில ஆட்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.
அரசு துறைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் தடுப்பதற்காக முயற்சி நடக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் வாகனத்தில் சோதனை நடத்தினார்கள். அதுபோல இரண்டாம் நாள் பிரசாரம் முடித்து விட்டு இரவு காஞ்சிபுரத்தில் நான் தங்கியிருந்த ஓட்டலில் சோதனை நடத்தினார்கள்.
எங்கள் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உளவுத்துறை மூலம் பணம் வைத்து அதனை எடுப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் தகவல் வருகிறது. தேர்தலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆளுங்கட்சி எடுக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இவ்வாறு தினகரன் கூறினார்.