போலியான நிபுணர் அறிக்கை தாக்கல்: சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் மீது அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து ஐகோர்ட்டு பதிவு செய்தது
போலியான நிபுணர் அறிக்கை தாக்கல் தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தலைவர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டு பதிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழக காவல்துறையில் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில், போலீஸ்காரர் எஸ். அருணாச்சலம் என்பவர் கலந்து கொண்டார். அவர் கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்கு அளித்த பதில் தவறு என்று கூறி மதிப்பெண் அளிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் அளித்த பதில் சரியா?, தவறா? என்பதை ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் கணித நிபுணரிடம் கருத்து கேட்கும்படி, தேர்வை நடத்திய தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஐ.ஐ.டி. பேராசிரியர் டி.மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையில், மனுதாரர் அளித்த பதில் தவறு என்று அறிக்கை கொடுத்தார்.
போலி அறிக்கை
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தார். இந்தநிலையில், மனுதாரர் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ஐ.ஐ.டி. நிபுணர் என்று டி.மூர்த்தி என்ற பேராசிரியரிடம் அறிக்கை பெற்றுள்ளனர். ஆனால், ஐ.ஐ.டி.யில் அப்படி ஒரு நபர் யாரும் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பணியாற்றியது இல்லை. எனவே, இந்த நிபுணர் அறிக்கையே போலியானது’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, போலி அறிக்கையை சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு வழங்கி மோசடி செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யார் அவர்?
இதையடுத்து நீதிபதி, ‘நிபுணர் அறிக்கையில் மோசடி செய்ததாக கூறப்படும் ஜி.வி. குமார் என்பவர் யார்?. இவருக்கும், சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கும் என்ன தொடர்பு? என்பது உள்ளிட்ட விவரங்கள் எதையும் அரசு தரப்பில் தெளிவுப்படுத்தவில்லை. எனவே, சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி. என்.கே.செந்தாமரைக்கண்ணன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
மோசடி செய்து விட்டனர்
அதில், “உளவியல் நிபுணரான ஜி.வி.குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகராக உள்ளார். எழுத்து தேர்வு நடத்தும்போது, உளவியல்ரீதியான கேள்விகளை இவர்தான் தயாரித்து கொடுப்பார். இவர்தான் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து, அவரிடம் இருந்து நிபுணர் அறிக்கையை பெற்று கொடுத்தார். இவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து, தேர்வாணையத்தை ஏமாற்றி, மோசடி செய்துவிட்டனர். அதனால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கில், அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வெட்கக்கேடானது
பின்னர், “தவறான அறிக்கையை கொடுத்து, ஐ.ஜி.,யை ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறுவதே வெட்கக்கேடானது. இந்த வழக்கில், ஐ.ஜி., தாக்கல் செய்துள்ள கடிதம், பதில் மனு எதுவுமே நம்பும்படியாக இல்லை. அனைத்து ஆவணங்கள் மீதும் சந்தேகம் உள்ளது. தேர்வாணையம் தாக்கல் செய்த நிபுணர் அறிக்கை உண்மையானது என்ற நம்பிக்கையில், மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு இந்த ஐகோர்ட்டு அநீதி இழைத்து விட்டது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அப்போது, போலி நிபுணர் அறிக்கை கொடுத்து மோசடி செய்த ஜி.வி.குமாரை போலீசார் கைது செய்துவிட்டதாக அரசு வக்கீல் கூறினார். அதற்கு நீதிபதி, ‘தவறு எல்லா பக்கமும்தான் உள்ளது. தேர்வாணையம் தரப்பிலும் தவறு உள்ளது’ என்றார்.
கோர்ட்டு அவமதிப்பு
பின்னர், ‘இந்த ஐகோர்ட்டுக்கு போலியான நிபுணர் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தலைவர் (டி.ஜி.பி.) மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்கிறேன். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.