மனைவியை அடித்துக்கொன்ற விவசாயி வெட்டிக்கொலை மகன் உள்பட 2 பேர் கைது
துறையூர் அருகே நள்ளிரவில் மனைவியை அடித்துக்கொன்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
துறையூர்,
துறையூர் அருகே நள்ளிரவில் மனைவியை அடித்துக்கொன்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவில் வாக்குவாதம்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 45). இவரது மனைவி மலர்கொடி(43). விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு சின்னதுரை (24), ராஜதுரை, ராமதுரை ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் சின்னதுரை பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். பரமசிவத்தின் வீட்டின் அருகே அவருடைய தந்தை நடேசன்(70) வசித்து வருகிறார்.
பரமசிவம் தினமும் மாலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து, மலர்கொடியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் அவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரை மலர்கொடி கண்டித்தார். இதையடுத்து கணவன்- மனைவி இடையே நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரட்டைக்கொலை
இதில் ஆத்திரமடைந்த பரமசிவம், வீட்டில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து மலர்கொடியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வந்த நடேசன் மற்றும் சின்னதுரை ஆகியோர் மலர்கொடி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கும், பரமசிவத்துக்கும் வாக்குவாதம் எற்பட்டது. அப்போது அவர்கள் அங்கிருந்த அரிவாளை எடுத்து பரமசிவத்தின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பரமசிவம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலர்கொடி மற்றும் பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடேசன், சின்னதுரை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.