சரத்குமாருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கோரினார்
நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தரும்படி சரத்குமாரிடம், ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
சென்னை,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுவும் பெறப்பட்டது. வேட்புமனு தாக்கல் தொடங்கியபோதும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் இல்லத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். அப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தரும்படி சரத்குமாரிடம், ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு சரத்குமார், நாளை (இன்று) சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி, ஆலோசனை செய்து, நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். அதனடிப்படையில் இன்று காலையில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவை சரத்குமார் அறிவிப்பார் என்று தெரிகிறது.