நாடாளுமன்ற தேர்தலையொட்டி நகர் பகுதிகளில் பிரசார கூட்டம் நடத்த தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நகர் பகுதியில் அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
திருச்செந்தூரை சேர்ந்த நாராயணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருச்செந்தூர் கோவில் ரத வீதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்கின்றன. திருச்செந்தூர் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இதுபோன்ற பொதுக்கூட்டங்களை கோவிலை சுற்றி நடத்தினால், பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
தடை விதிக்க வேண்டும்
பக்தர்களின் நலன் கருதி, திருச்செந்தூர் கோவிலின் ரத வீதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கடந்த மாதம் தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த மனுவின் அடிப்படையில் அந்த பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிப்பதை அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பொதுமக்களுக்கு இடையூறு
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருந்ததாவது:-
தேர்தல் நேரங்களில் நகரம், பெருநகர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் அமைதியாக, சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. நகர் பகுதி தெருக்கள், சாலைகள், குடியிருப்புகளுக்கு அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதித்தால் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படும்.
கூடுதல் ஒலி மாசு
அதுமட்டுமல்லாமல், தற்போது தேர்தல் பிரசார சமயம் என்பதால் கூடுதல் ஒலி மாசு ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.
நகரில் கூட்டத்துக்கு தடை
மேலும், ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ள நாடாளுமன்றத்தேர்தல், சட்டசபைக்கான இடைத்தேர்தல்களையொட்டி, நகர் பகுதி தெருக்கள், சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்த போலீசார் அனுமதிக்கக்கூடாது. அதற்கு மாறாக, புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடத்த அனுமதி வழங்கலாம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதி ஒத்திவைத்தனர்.