சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்தால் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் ரத்துசெய்யப்படும் என்று சேலம் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்,
தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்தால் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் ரத்துசெய்யப்படும் என்று சேலம் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க.வின் கோட்டை தான் சேலம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இருக்கின்றதோ, அப்போதெல்லாம் சாமானிய மக்களுக்காக எத்தனையோ திட்டங்கள் உருவாக்கித் தரப்பட்டிருக்கின்றது. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம் என்று ஒன்றையாவது சொல்லக்கூடிய தகுதியை, திராணியை பெற்றிருக்கின்றதா?
சொல்லலாம். என்ன சொல்லலாம் என்று கேட்டால், அவர்கள் சொல்லக்கூடிய சாதனைகள் எல்லாம் வேதனைகளாகத் தான் இருக்கும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கோடநாடு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவோம் என்ற உறுதிமொழி தரப்பட்டுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி விரைவில் நிறைவேற்றப்படும். ஊழல் செய்துவிட்டு கைதானவர் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா. இப்போது ஊழல் மட்டுமல்ல கொலை செய்து சிறைக்குச் செல்லக்கூடிய முதல்-அமைச்சர் என வரலாறு படைக்கக் கூடியவர்தான் இப்பொழுது முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி.
இது தமிழ்நாட்டிற்கு அவமானம். தமிழக அரசியலுக்கு அவமானம். அதுமட்டுமல்ல அவருக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் அதைத் தொடர்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்கள். ஒரு கிரிமினல் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 2 பேர் சேர்ந்துதான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது புதிதாக 3-வது ஒருவர் சேர்ந்திருக்கின்றார். டாக்டர் ராமதாஸ். 5 வருடமாக நாம் கூட ஆளும் கட்சி அ.தி.மு.க.வை பார்த்து இப்படி திட்டியது கிடையாது. அவ்வளவு திட்டு, கேவலமான முறையில் திட்டு, அப்படி எல்லாம் திட்டித் தீர்த்துவிட்டு இப்பொழுது கூட்டணி சேர்ந்து இருக்கின்றார்கள். ஏனென்றால் கேட்டதெல்லாம் இப்பொழுது கிடைத்திருக்கின்றது அவருக்கு. சீட்டு மட்டுமா கிடைத்திருக்கின்றது, எல்லாம் கிடைத்திருக்கின்றது. ஒருவேளை கேட்டதைவிட அதிகமாக கிடைத்திருக்கலாம் எனவே, அதற்காக கூட்டணி.
நம்முடைய கூட்டணியை பொறுத்தவரையில் ஏதோ தேர்தலுக்காக மாத்திரம் அமைந்து இருக்கின்றது என்று நீங்கள் கருதவேண்டிய அவசியமில்லை. இது ஒரு கொள்கை கூட்டணி, ஆனால் எதிரணியில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணியை பொறுத்தவரைக்கும் அது பேரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் கூட்டணி.
5 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஏற்காத சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கின்றோம். அதே நேரத்தில் மாற்றாக சென்னை-சேலம் இடையில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகள், சாலைகள் அனைத்தையும் சாலைகளின் இருபுறமும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை பயன்படுத்தி அகலப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை நாம் அளித்திருக்கின்றோம்.
அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் நான் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக, சட்டசபையில் 2 தீர்மானங்கள் கண்துடைப்புக்காக போட்டார்கள். ஆளும்கட்சி அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவருகிறது, அதை நாம் ஏற்கக்கூடாது என்று அரசியல் பார்க்கவில்லை. இது மாணவர்கள் பிரச்சினை. எனவே இதை நாம் ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆதரித்தோம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கே என கேட்டால், என்ன சொல்கின்றார்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சரி அனுப்பிய தீர்மானம் என்ன நிலையில் உள்ளது? ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும் பெற்றார்களா? அதையும் செய்யவில்லை. இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டு தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களை ஏமாற்ற குறிப்பாக இளைஞர்களை ஏமாற்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்களே தவிர வேறு அல்ல.
தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் கருணாநிதி “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற அறிவிப்பை வெளியிடுவார்கள். எனவே, இப்பொழுது கருணாநிதியின் மகனான ஸ்டாலினும் சொல்கின்றேன். சொன்னதைத் தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.