‘மத்தியில் நிலையான ஆட்சியை மோடியால் மட்டுமே தரமுடியும்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு
கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
சேலம்,
கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மத்தியில் நிலையான ஆட்சியை மோடியால் மட்டுமே தரமுடியும் என்று அவர் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
கருமந்துரையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிட்டுவிட்டு, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ், சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கினார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் வேனில் இருந்தபடி பேசியதாவது:-
இந்தியா வளர்ச்சி பெற...
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். ஒரு நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு திறமைமிக்க வலிமையான தலைவர் மிக அவசியம். அந்த தகுதியுடைய ஒரே தலைவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக இருந்தால் தான் இந்தியா பல்வேறு நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். மத்தியில் பாதுகாப்பான ஆட்சியை, நிலையான ஆட்சியை மோடியால் மட்டுமே தரமுடியும்.
மக்கள் நலன்
மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச்சிறப்பான நலத்திட்டங்களை எல்லாம் அறிவித்து, ஒரு நல்லாட்சியை நாட்டுமக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. நாள்தோறும் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு போற்றி பாதுகாத்து வருகிறது.
தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் யார் பிரதமர் என்றே முடிவு செய்யப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்தி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் அவர்கள் பிரதமர் யார் என்றே தெரியாமல் வாக்கு கேட்டு வருகிறார்கள். இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார் என்று முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். பச்சோந்தி என்று சொன்னால் அது ஸ்டாலினுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.
மக்களிடம் எடுபடாது
மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடையதாக இருந்தால் தான். பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்ற முடியும். மாநில அரசின் சில திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அதுபோன்ற அனுமதிகள் விரைவாக கிடைத்திடவும், அதன் மூலம் மக்களுக்கு வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்துவதற்கும், இதுபோன்ற கூட்டணி உதவியாக இருக்கும்.
தி.மு.க. 11 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம்வகித்து, ஆட்சி அதிகாரத்திலே இருந்தார்கள். அப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக ஏதேனும் குரல் கொடுத்தார்களா? மக்கள் பிரச்சினையை மத்திய அரசிடம் எடுத்துரைத்து தீர்த்துவைத்தார்களா? எதையுமே, அவர்கள் செய்யவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் நாங்கள் தான் இதை செய்தோம், அதை செய்தோம் என்று பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வாக்குகளைப்பெற நினைக்கிறார்கள். இது ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
நீங்கள் வருகின்ற தேர்தலில் யார் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை தெரிந்து இந்த கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதா மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். மருத்துவ காப்பீடு தொகை ரூ.2 லட்சமாக இருந்தது, தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் மிகச்சிறந்து விளங்குகிறது. விவசாயிகளின் நலனை கருத்திலே கொண்டு குடிமராமத்து என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏரிகள், குளங்கள், அணைகள் தூர்வாரப்பட்டு நிலத்தடி நீர் உயர்வதற்கு ஒரு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வெற்றி கூட்டணி
எனவே, நாட்டு மக்களுக்கு முறையான பாதுகாப்பும், பல்வேறு நலத்திட்டங்களும் தொடர்ந்து கிடைத்திட கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசுக்கு முரசு சின்னத்திலும், சேலம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் நலன்சார்ந்த கூட்டணி, நாடும் நமதே, நாற்பதும் நமதே.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ரூ.2 ஆயிரம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலையில் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, அரூர் தொகுதி சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:-
தைப் பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1,000 வழங்கக்கூடாது என தி.மு.க. நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1,000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதேபோன்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என நான் அறிவித்தேன். ஏழை தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.க.வின் வாடிக்கையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.