தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் தள்ளுபடி
மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை ஒத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை,
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்குக்குகள் நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேர்தல் நடத்தும்போது, ஒருவரது மத வழிபாட்டு உரிமையில், எந்த குறுக்கீடும் செய்வது இல்லை. வழிபாட்டு தலங்களை அணுக, எந்த இடையூறும் ஏற்படாமல் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே, மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.