தேர்தலில் வாக்களிக்க அடையாள ஆவணமாக பூத் சிலிப் ஏற்றுக்கொள்ளப்படாது தமிழக அரசு தகவல்
வாக்களிக்க அடையாள ஆவணமாக புகைப்பட வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) ஏற்றுக்கொள்ளப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முந்தைய தேர்தல்களில் தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை (பூத் சிலிப்) அடையாளத்திற்கான ஓர் ஆவணமாக அனுமதித்து இருந்தது. இந்த ஆவணம் வாக்காளர் பட்டியலை இறுதிசெய்த பிறகு, தேர்தல் நாளுக்கு சற்று முன்னர் வழங்கப்படுவதால் இதனை தனித்த அடையாளத்திற்கான ஆவணமாக உபயோகப்படுத்துவதற்கு எதிராக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
புகைப்பட வாக்காளர் சீட்டில் பாதுகாப்பான அம்சங்கள் ஏதும் இல்லை. முந்தைய தேர்தல்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், புகைப்பட வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டது. தற்போது 99 சதவீதம் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை பெற்றுள்ளனர். மேலும் வயது வந்தோர்களில் 99 சதவீதத்தினர் ஆதார் அட்டையை பெற்று இருக்கின்றனர்.
ஏற்றுக்கொள்ளப்படாது
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது. அதன்படி வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்பட வாக்காளர் சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
எனவே நடைபெற உள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது ஆணையத்தால் மாற்று ஆவணமாக குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்தை வாக்காளர்கள் எடுத்து செல்ல வேண்டும்.
மாற்று ஆவணங்கள்
அதன்படி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டு தொடர்ந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதில் இந்த தகவல் தடித்த எழுத்துகளில் அச்சிடப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.