பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை - பொன்.ராதாகிருஷ்ணன்
பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கலந்துரையாடினார். இந்த கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மஹாலில் நடந்தது. அப்போது பா.ஜனதா அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் துறைமுக திட்டம் பற்றியும், துறைமுகம் வருவதால் ஏற்பட கூடிய நன்மைகள் பற்றியும் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 300–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அதே சமயத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டும். தேர்தல் அறிக்கை என்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு ஆகும். தாங்கள் அளிக்கும் தேர்தல் அறிக்கையை கட்சிகள் நிறைவேற்ற வேண்டும்.
பா.ஜனதா சார்பில் தமிழகத்துக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட பரிசீலனை செய்து வருகிறது. பா.ஜனதா அரசு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அவர் அரசியலுக்கு புதியவர். எனவே போகப்போக அவருக்கு விவரம் புரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார். என்றார்.