கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை செயல்படுத்தும் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் அதிகாரி
தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் பற்றி அரசியல் கட்சிகள் அறிவித்தால், அதை செயல்படுத்துவது பற்றிய விவரத்தையும் அந்தந்தக் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியதையடுத்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வரத்தொடங்கிவிட்டனர். நாடாளுமன்றத் தொகுதி ஒவ்வொன்றுக்கும் தலா 2 செலவினப் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மத்திய சென்னைக்கு மட்டும் 3 செலவினப் பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர்தான் பணியமர்த்தப்படுவார்.
ஆனால் தேர்தல் செலவு விஷயத்தில் கவனிக்கத் தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே தமிழகத்தில் மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தலா ஒரு செலபினப் பார்வையாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 79 பேரும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான செலவினப் பார்வையாளராக 16 பேரும் (2 பார்வையாளர்கள் தலா 2 தொகுதிகளை பார்வையிடுவார்கள்).
நாடாளுமன்றத் தொகுதிகளில் மத்திய சென்னைக்கு மஞ்சீத் சிங் (09530993410), மஜும்தர் (08985970139), மங்கராஜூ (9172257521); தென்சென்னைக்கு குருபிரசாத் (09845255331), மர்ரப்பு நவீன் (9849095412); வடசென்னைக்கு சஞ்சீவ்குமார் தேவ் (09408792200), விவேகானந்த் (9935380337); திருவள்ளூருக்கு முகேஷ் கட்டாரியா (09953694841), பிரவீன்குமார் (98911381910); ஸ்ரீபெரும்புதூருக்கு அமீஷ் அகர்வால் (9953909178), அர்ஜூன் லலியத் (08130144488); காஞ்சீபுரத்துக்கு பூபேந்திரசிங் அனந்த் (9408792047), சுஜித்குமார் (09449073437) ஆகியோர் செலவினப் பார்வையாளராக வந்துள்ளனர்.
இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதிகள் பூந்தமல்லிக்கு பிரவீன்குமார் (9891138191), பெரம்பூர்- விவேகானந்த் மவுரியா (9935380337), திருப்போரூர்- பூபேந்திர சிங் ஆனந்த் (9408792047), ஆகியோர் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்றுவிடுவார்கள். வேட்புமனு பரிசீலனையின்போது பொதுப் பார்வையாளர்கள் வருவார்கள்.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலவச திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும்போது, அந்தத் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?, அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது? என்ற விளக்கங்களையும் அதோடு அந்தக் கட்சிகள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான விளக்கத்தை அந்தக் கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பதாக ஏற்பாக செயல்படுத்துகிற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு, அதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு அந்தத் திட்டத்தில் புதிய பயனாளிகளைச் சேர்க்க முடியாது.
தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக இதுவரை 9 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 130 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 18-ந் தேதி மட்டும் 2 கோடியே 25 லட்சத்து 96 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுதவிர தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.