ஜெயலலிதா படத்தின் முன்பு வைத்து மரியாதை: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தின் முன்பு தேர்தல் அறிக்கையை வைத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிவிப்புகள் பெரும்பாலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசார வியூகம் அமைத்தல், தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் நியமித்தல், வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தல் போன்ற தேர்தல் நடவடிக்கைகள், களப்பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நேற்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட விவகாரம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.