மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல்: வாக்குப்பதிவு தேதியை மாற்றுவது குறித்து நாளை பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை சித்திரை திருவிழாவின் போது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால், தேர்தல் தேதியை மாற்றுவது குறித்து நாளை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-12 22:15 GMT
மதுரை, 

மதுரை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வக்கீல் பார்த்தசாரதி ஆஜராகி, தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது. ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும். எனவே மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “உங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர்.

மனுதாக்கல்

அதனை தொடர்ந்து, வக்கீல் பார்த்தசாரதி நேற்று மதுரை தொகுதி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறும் போது, “சித்திரை திருவிழா என்பது தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரைக்கு வந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். 5 லட்சம் பொதுமக்கள் சித்திரை திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். கூட்ட நெரிசலால் போக்குவரத்து தடைபட்டால், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்” என்றனர்.

சிரமங்கள் உள்ளன

அதற்கு இந்திய தேர்தல் கமிஷன் தரப்பில் அளித்த பதிலில், “மாவட்ட நிர்வாகம், மாநகர போலீஸ் கமிஷனர், தலைமைச்செயலாளர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையிலேயே அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது

அரசு கூடுதல் தலைமை வக்கீல் வாதிடுகையில், “மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால், தேர்தலை நடத்தலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து, ஒப்புதல் கொடுக் கப்பட்டது” என்றார்.

பதிலளிக்க வேண்டும்

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், “தவறான அறிக்கையை வைத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் கமிஷனும் கவனத்தில் கொள்ளவில்லை. தேனி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற உள்ளூர் திரு விழாக்கள் அதே சமயத்தில் நடக்க இருப்பதால், அவற்றையும் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பது குறித்து 14-ந் தேதி (நாளை) இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்