த.மா.கா. இன்று இணைகிறது: அ.தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? உத்தேச பட்டியல் வெளியானது
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இன்று இணைகிறது. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக, நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இன்று (புதன்கிழமை) காலை இணைய இருக்கிறது. அந்தக் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது. அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.
தொகுதிகள் குறித்து முடிவு
அத்துடன் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெறுகிறது. அடுத்து கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கின்றன. பொதுவாக, தொகுதிகளின் எண்ணிக்கையை பற்றி பேசியபோதே, எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் அ.தி.மு.க. கூட்டணியில் பேசப்பட்டது.
அதனால், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தும் அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தேச தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
உத்தேசப் பட்டியல்
அ.தி.மு.க. - வடசென்னை, தென்சென்னை, காஞ்சீபுரம் (தனி), திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி.
பா.ம.க. - மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம் (தனி), கடலூர்.
பா.ஜ.க. - கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
தே.மு.தி.க. - கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் (தனி).
த.மா.கா. - மயிலாடுதுறை.
புதிய தமிழகம் - தென்காசி.
புதிய நீதிக்கட்சி - வேலூர்.
என்.ஆர்.காங்கிரஸ் - புதுச்சேரி.
இது உத்தேசப் பட்டியல் தான். ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.