கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிக்கப்படும் - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்

கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிக்கப்படும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Update: 2019-03-12 09:44 GMT
சென்னை,

அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் ஜி.கே.வாசன் இல்லத்திற்கு வருகை தந்தனர். அங்கு  ஜி.கே. வாசனை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ஜி.கே வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆலோசனைக்குப்பின் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை அறிவிப்பேன் என கூறினார்.

முன்னதாக த.மா.கா. நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் நமது கட்சிக்கு என்று தனியாக குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே 2 தொகுதிக்கும் குறைவாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி வேண்டாம். அதற்கு பதிலாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நாமும் தனித்து போட்டியிடலாம் என்ற கருத்தை சிலர் முன்வைத்தனர்.

இன்னும் சிலர் கூறும் போது, ‘‘நாம் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள். அப்படியிருந்தும் கூட்டணிக்காக பா.ஜனதாவை ஆதரிக்கும் அளவுக்கு இறங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் தான் நமக்கு கூடுதலாக தொகுதிகளை தர வேண்டும்’’ என்றனர்.

சிலர் பேச்சுவார்த்தையின் நிலவரங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அவர்கள் மத்தியில் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘உங்கள் உணர்வுகளும், ஆதங்கமும் எனக்கு புரிகிறது.

அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். எனவே நிர்வாகிகள் வேறு எந்த மாறுபாடான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறும்போது:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் முடிவை பொறுத்து முடிவு செய்யப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்