அமைச்சர்கள், துணை சபாநாயகர் மீது அவதூறு செய்தி போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது அவதூறு செய்தி பரப்பியதாக கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-03-11 23:15 GMT
சென்னை, 

சென்னை போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழக அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான, அவதூறு செய்திகளை பரப்பியது குறித்து நேற்று இரவு அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்காய் ஜி.ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

இதற்கிடையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் நேற்று அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு சமூக ஊடகங்களில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதுபோல் தயாரித்து பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வில் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கும், எனக்கும், என் மகனுக்கும் தொடர்பு உள்ளதுபோல, என்னுடைய அரசியல் பயணத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய அநீதி நடந்து இருக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதன் முதலில் இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே நான் தான். ஆனால், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பொய்யான செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற செய்தியை பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வினர் தூண்டுதல்

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

சமூக ஊடகங்களில் திமு.க. வினரின் தூண்டுதலின் பேரில், என்மீது ஒரு தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதற்கு சரியான விளக்கங்களை நான் தரவேண்டியது உள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர் முதலில் என்னிடம் வந்துதான் புகார் செய்தனர்.

நான் உடனடியாக போலீஸ் அதிகாரிகளை தொடர்புகொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். போலீசாரிடம் இந்த தகவலை கூறியதே நான் தான். இதற்கான பத்திரிகை செய்திகள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அன்றே நான் அளித்த பேட்டி ‘தினத்தந்தி’ உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளன. இந்த பிரச்சினையை வெளிச்சம்போட்டு காட்டியதே நான் தான்.

அவதூறு பரப்புகின்றனர்

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொள்ளாச்சி தொகுதியில் எனக்கு கெட்டபெயரை உண்டாக்குவதற்காக தி.மு.க.வினர் எனது மகன்கள் பெயரில் அவதூறு பரப்புகின்றனர். ஆனால், அது தவறான தகவல் என்று தெரியப்படுத்த பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் தயாராக உள்ளனர். இதையெல்லாம் தூண்டிவிடுவது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான். இது மிகப்பெரிய பொய் செய்தியாகும்.

எனது குடும்பத்தை பொறுத்தவரை, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு யார் காரணம் என்பதும் அங்குள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். இதில் எவ்வளவு பெரிய விசாரணை வைத்தாலும் சரி, இந்த சம்பவத்தில் மாட்டப்போவது தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகன் தான். அவருக்கும், இந்த வழக்கின் முதல் குற்றவாளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இதில் யார்-யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தி.மு.க.வினர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்வேன். இந்த பாலியல் குற்றம் தொடர்பாக நடந்த ஒரு அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதில் யார் தவறு செய்து இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்