சென்னையில் துணிகரம் நிதிநிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.1 கோடி கொள்ளை
சென்னையில் நிதிநிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸ் வேடத்தில் வந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற, 4 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சென்னை,
சென்னை ஏழுகிணறு பகுதியில் கண்ணன் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதிநிறுவனத்தில் கோபிநாத் (வயது 26) என்பவர் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். கோபிநாத் கண்ணனின் உறவினர் ஆவார். நிதிநிறுவனத்தின் மூலம் ஏராளமானவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தொகையை கோபிநாத் வசூல் செய்வார்.
கடந்த சனிக்கிழமை அன்று கோபிநாத், பர்மாபஜாரில் கடை வைத்துள்ள 5 வியாபாரிகளிடம் ரூ.98 லட்சத்தை வசூல் செய்தார். அந்தப்பணத்தை திருச்சியில் உள்ள தனது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லும்படி கோபிநாத்திடம் கண்ணன் கேட்டுக்கொண்டார். அதன்படி அந்தப்பணத்தை ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக்கொண்டு கோபிநாத் கடந்த சனிக்கிழமை இரவு திருச்சிக்கு கிளம்பினார்.
சென்னை கோயம்பேடுக்கு மாநகர பஸ்சில் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு இன்னொரு பஸ்சில் செல்ல கோபிநாத் திட்டமிட்டார். அதன்படி ரூ.98 லட்சம் பணம் உள்ள பையை எடுத்துக்கொண்டு, கோயம்பேடு செல்லும் ‘15 எப்’ மாநகர பஸ்சில் பயணித்தார்.
காரில் கடத்தல்
அந்த பஸ் கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலை பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது இன்னோவா காரில் வந்த 3 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் 4 பேரும் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். கோபிநாத் கஞ்சா கடத்தி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும், அவரது பையை சோதனை போடவேண்டும் என்றும் கூறினார்கள்.
இதை பார்த்து பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பதற்றம் அடைந்தனர். கோபிநாத்தை கீழே இறக்கினார்கள். கைவிலங்கு போட்டு அவரை இழுத்துச்சென்றனர். பின்னர் தாங்கள் வந்த இன்னோவா காரில் கோபிநாத்தை ஏற்றினார்கள். கோபிநாத் ஏற மறுத்தார். அவரை அடித்து உதைத்தார்கள். பின்னர் கோபிநாத்தை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர்.
கொள்ளை
கோபிநாத்தை கடத்திய கார் முன்னே செல்ல, அதன்பின்னால் மோட்டார் சைக்கிள் ஆசாமி வந்தார். கார் வண்டலூரைச் தாண்டிச்சென்றதும் சாலை ஓரமாக நிறுத்தினார்கள். கோபிநாத் வைத்திருந்த 98 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் கோபிநாத்தை கைவிலங்கோடு காரில் இருந்து கீழே தள்ளினார்கள். கோபிநாத் கூச்சல்போட்டார். அதற்குள் கார் மின்னல்வேகத்தில் சென்றுவிட்டது. மோட்டார் சைக்கிள் ஆசாமியும் காரை பின்தொடர்ந்து சென்றுவிட்டார். பணத்தை பறிகொடுத்த கோபிநாத் நிதிநிறுவன முதலாளி கண்ணனுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தார்.
வலைவீச்சு
இந்தச்சம்பவம் தொடர்பாக ஒரு நாள் தாமதமாக, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
கீழ்ப்பாக்கம் போலீசார் இதுகுறித்து 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.98 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் 4 பேரும் போலீஸ் வேடத்தில் வந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.