தமிழகத்தில் எத்தனை மதுபான ஆலைகள் உள்ளன? அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

“தமிழகத்தில் எத்தனை மதுபான ஆலைகள் உள்ளன?” என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், அது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Update: 2019-03-06 21:00 GMT
மதுரை, 

“தமிழகத்தில் எத்தனை மதுபான ஆலைகள் உள்ளன?” என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், அது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

1 கோடி பேருக்கு மதுவிற்பனை

விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

தமிழகத்தில் 4 ஆயிரத்து 701 டாஸ்மாக் கடைகள் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. மது குடிப்பதால் விபத்துகள் அதிக அளவில் நடப்பதுடன், பல்வேறு நோய்களால் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

உத்தரவிட வேண்டும்

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாக மூடப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பின்படி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை.

எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

எத்தனை ஆலைகள்?

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தமிழகத்தில் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எத்தனை உள்ளன? அந்த ஆலைகளில் தயாரிக்கும் மதுபானங்களில் எவ்வளவு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்