ஆட்சியை தக்க வைக்க 21 தொகுதி இடைத்தேர்தல் முடிவு முக்கியம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

“ஆட்சியை தக்க வைக்க 21 தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு முக்கியம்” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2019-03-05 21:15 GMT
சிவகாசி, 

“ஆட்சியை தக்க வைக்க 21 தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு முக்கியம்” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ரவுடியா?

டி.டி.வி. தினகரன் என்னை ரவுடி என்று பேசுகிறார். ஆனால் அவருடன் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ. சபாநாயகரை கையை வெட்டுவேன், கொறடாவை வெட்டுவேன் என்று கூறுகிறார். தினகரன்தான் குண்டர்களை வைத்துள்ளார். தினகரனுக்கு யாரை பார்த்தாலும் தப்பாகத்தான் தெரியும். அவருக்கு உண்மையை பேசினால் கசக்கும். தேர்தல் முடிவுக்கு பின்னர் நாங்கள் திண்ணையில் உட்காருகிறோமா? தினகரன் பண்ணையில் உட்காருகிறாரா? என்று பார்ப்போம்.

தினகரன் மனம் திருந்தி அ.தி.மு.க.வில் இணைய விரும்பினால் அது பற்றி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும்தான் முடிவு செய்வார்கள். முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பின்னர் அவரை சித்தப்பா என்று கூறலாம். எனது அரசியல் வாழ்வில் என் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியது தினகரன் குடும்பத்தினர்தான். ஆனால் அவர்கள் யாரும் இப்போது தினகரனுடன் இல்லை. டி.டி.வி.தினகரன் தனி மரம்.

இடைத்தேர்தல் முடிவு முக்கியம்

21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு முக்கியம். அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இது அவசியம். அதற்காக நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை ஒதுக்கி கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும்.

அ.தி.மு.க. கட்சியில் சில மாவட்ட செயலாளர்களை நிர்வாக ரீதியாக அவசியம் கருதி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மாற்றம் செய்திருக்கிறார்கள். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்