அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் ‘மோடி அரசு முழு பலத்தோடு மீண்டும் ஆட்சிக்கு வரும்’ நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், மோடி அரசு முழு பலத்தோடு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை,
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், மோடி அரசு முழு பலத்தோடு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில், மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
ஆராயக்கூடாது
கேள்வி:- பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது அரசியல் ஆதாயத்துக்கு என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறிவருகிறார்களே?
பதில்:- பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியலை தொடர்புபடுத்தி பேச நான் விரும்பவில்லை. நாட்டை காப்பாற்ற, பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, நமக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்தது. இதற்கு மேல் இதை ஆராயக்கூடாது.
பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதிகள் வருகிறார்கள். பயங்கரவாத முகாம்களை ஒழித்து கட்டுமாறு பாகிஸ்தானிடம் ஆதாரத்துடன் பலமுறை நாம் வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த முகாம்களையும் அழிக்கவில்லை. ஆனால், எங்களிடம் பயங்கரவாதிகள் இல்லை, நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்று பாகிஸ்தான் அரசு உலக நாடுகளிடம் கூறி வந்தது.
அரசியல் இல்லை
ஆனால் உண்மையிலேயே பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகள் மூலம் தான் நமக்கு அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நமது நீதிமன்றம் தான் தண்டனை வழங்கியது. பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடைசியாக பாகிஸ்தானில் நமது விமானப்படை, பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக அழித்துவிட்டு வந்தது. அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
மோடி அரசு ஆட்சிக்கு வரும்
கேள்வி:- அபிநந்தன் மீண்டும் எப்போது பணிக்கு திரும்புவார்?
பதில்:- அதுகுறித்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவினரும், விமானப்படை உயர் அதிகாரிகளும் முடிவு எடுப்பார்கள்.
கேள்வி:- பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சில செயற்கைக்கோள் வரைபடங்கள் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்:- அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி:- அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது, தமிழகம் மற்றும் இந்திய அளவில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
பதில்:- தமிழகத்திலும், இந்தியாவிலும் மோடி அரசு முழு பலத்தோடு மீண்டும் ஆட்சிக்கு வரும். கூட்டணிக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
பயங்கரவாதம் அடங்க வேண்டும்
கேள்வி:- பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்:- பயங்கரவாதத்தை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தை என இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதம் அடங்கவேண்டும்.
கேள்வி:- அப்படி என்றால் மீண்டும் ஒரு தாக்குதல் பாகிஸ்தான் மீது நடத்தப்படும் என சூசகமாக சொல்கிறீர்களா?
பதில்:- நான் சூசகமாக சொல்லும் ஆசாமி கிடையாது. மனதில் பட்டதை வெளிப்படையாகவே சொல்லிவிடுவேன்.
இவ்வாறு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் பிரதம மந்திரி தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (ஷ்ரம் யோகி மன்தான்), அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று, அமைப்புசாரா தொழிலாளர்கள் 10 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நிலோபர் கபில், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.