வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-05 19:30 GMT
சென்னை, 

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நிதி உதவி

சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை கடந்த மாதம் பிறப்பித்தது.

தற்போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காணாமல், அனைத்து குடும்பத்தினருக்கும் சிறப்பு நிதி உதவியை வழங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரை அடையாளம் காண்பது குறித்து தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை பின்பற்றவும், அதன் பின்னர் சிறப்பு நிதி உதவிகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

போலி அரசாணை

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல், ‘ஏழைகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை. இந்த உதவி வழங்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையைத்தான் எதிர்க்கிறோம். முதலில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக்கூறிய அரசு, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக அனைவருக்கும் கொடுக்கிறது’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அட்வகேட் ஜெனரல், ‘இந்த வழக்கில், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி. இந்த அரசாணையை மனுதாரர் எங்கிருந்து பெற்றார்? என்று அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். தற்போது விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வரும் நிலையில், யார்-யாருக்கு உதவித்தொகை வழங்குவது என்பது பின்னர்தான் முடிவு செய்யப்படும்’ என்று வாதிட்டார்.

தள்ளிவைப்பு

இதையடுத்து, இந்த அரசாணை யாரிடம் இருந்து பெறப்பட்டது? என்பது குறித்து விளக்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள், ஏழைகளாக கருதப்படுபவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்