திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - வைகோ

திமுக கூட்டணியில் ம.தி.மு.க போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-04 10:15 GMT
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது. 

அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.முக ஆகிய கட்சிகள்  2-ம் கட்ட  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 

இதில் விடுதலை சிறுத்தைகள் ,மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறி உள்ளது.

தற்போது  தி.மு.க - ம.தி.மு.க.   இடையே கூட்டணி தொடர்பாக  ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும்  ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும்  தகவல் வெளியானது.  

இது குறித்து தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்த பின்  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-

"தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு நாளை மாலை இறுதியாகும்" என்றார். 

மேலும் செய்திகள்