தூத்துக்குடி தொகுதியில் போட்டி? விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி எம்.பி.
திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்தி வரும் நேரத்தில், தங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றும் வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில், இன்று அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த அவர் , தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, நேற்று நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால் அந்த தொகுதி அவருக்கே ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதுவரை மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்காத கனிமொழி எம்.பி. முதல் முறையாக தூத்துக்குடி தொகுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 750 விருப்ப மனுக்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 200 விருப்ப மனுக்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.