மார்ச் 5-ம் தேதி தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் : கூட்டணி முடிவு பற்றி அறிவிக்க வாய்ப்பு

தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி தொடர்பான தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-03-03 10:45 GMT
சென்னை,

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேமுதிகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வந்தது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை திமுக கைவிட்டது.

இதனையடுத்து அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி தொடர்பான தனது முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 

''தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், தேமுதிக அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்