தேமுதிக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2-வது நாளாக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-03-02 10:44 GMT
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.

மார்ச் 1-ந் தேதியை நேற்று தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்தது.

தி.மு.க.வின் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க  அலுவலகத்திற்கு நேற்று காலை விஜயகாந்த் வருகை தந்தார்.  கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 

பரபரப்பாகி வரும் தேர்தல் களத்தில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. 

இன்றும் 2-வது நாளாக  விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். காலை 10 மணிக்கு தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன், அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் யாரும் தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. வெளியில் காத்து நின்றனர். 11.50 மணிக்கு விஜயகாந்த் பின் வாசல் வழியாக கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது குறித்து விவாதித்தனர்.

தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளை பா.ம.க.வும் கேட்க கூடும் என்பதால் அவற்றில் எது சாத்தியமாகுமோ அவற்றை வலியுறுத்தி பெறுவது பற்றி ஆலோசித்தனர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளையும் விருப்ப பட்டியலாக கொடுக்கலாம் எனவும் அதில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வலியுறுத்தலாம் என்பது பற்றியும் விஜயகாந்த் ஆய்வு செய்தார். பின்னர் 12.25 மணிக்கு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தே.மு.தி.க. கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் இருப்பதால் எப்படியாவது அ.தி.மு.க.கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் விரும்புகிறது.

அ.தி.மு.க-பா.ஜனதா இரு தரப்பில் இருந்தும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் பிரேமலதாவிடம் பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் 
தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதியும், 1 மேல்- சபை சீட்டும் வழங்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்