அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க; ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்
சென்னை
வரும் 6 ஆம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் வருகின்ற 6 ஆம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்னர் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.
இதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், பெஞ்சமின், மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.