கோவிலில் கூட்டம் நடத்தி ரேஷன்கடை ஊழியர்களிடம் லஞ்சம் வசூல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 3 அதிகாரிகள் சிக்கினர்
கோவிலில் கூட்டம் நடத்தி ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் உள்பட 3 பேர் சிக்கினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மார்க்கெட் ரோட்டில் அகோபில நரசிங்க பெருமாள் கோவிலில் ரேஷன் கடை விற்பனையாளர்களின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள 96 ரேஷன் கடைகளில் இருந்து 84 விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஒவ்வொரு ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் இருந்தும் வேடசந்தூர் வட்ட வழங்கல் அதிகாரி நாச்சிமுத்து, கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணிராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோர் லஞ்சமாக பணம் வாங்குவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து அகோபில நரசிங்க பெருமாள் கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கோவிலின் கதவை பூட்டி 3 அதிகாரிகள் மற்றும் 84 விற்பனையாளர்களிடம் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரத்து 250-ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதுதொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர் நாச்சிமுத்து, கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணிராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் நடந்த ரேஷன் கடை விற்பனையாளர்களின் கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் புகுந்து அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.