அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்ப சொந்த ஊர்மக்கள் பிரார்த்தனை

அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்ப சொந்த ஊர்மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-28 22:15 GMT
திருவண்ணாமலை, 

பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தனின் சொந்தஊர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா திருப்பறம்பூர் கிராமம் ஆகும். 3 தலைமுறைகளாக இக்கிராமத்தில் வசித்த அவர்களின் வீடு, நிலங்கள் அப்படியே உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தாம்பரம் பகுதிக்கு அவர்கள் குடியேறியுள்ளனர்.

திருப்பறம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுதர்மசாகர் சமணர் கோவிலில் மாசி மாதத்தில் நடக்கும் திருவிழாவுக்கு ஆண்டு தோறும் அபிநந்தன் குடும்பத்தினர் நேரில் வந்து பங்கேற்று வருகிறார்கள் என ஊர் பொதுமக்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

அவரது குடும்பத்தினர் நாட்டின் மீது அதிக பற்றுக்கொண்டவர்கள். அவரது தந்தை வர்தமான் விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாத்தா சிம்மகுட்டி ராணுவத்தில் பணியாற்றியவர். எனவே, தனது தந்தையை போல இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்றிட அபிநந்தன் விரும்பியதாக அவரது உறவினர்கள் தேவக்குமார், கவுந்தி ஆகியோர் தெரிவித்தனர்.

அபிநந்தனின் தாய் வழி உறவினர் அஜித்பிரசாத் வெம்பாக்கம் பஸ் நிலையத்தில் புத்தக கடை வைத்துள்ளார். அவர் கூறுகையில், எங்கள் கிராமத்தின் வீரத்திருமகன் அபிநந்தன். அவரை எண்ணி பெருமைபடுகிறோம். அவரை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அபிநந்தன் நல முடன் நாடு திரும்ப பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அபிநந்தனை மத்திய அரசு பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அழைத்து வரவேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அபிநந்தனின் உற வினர் லட்சுமி என்பவர் திருப்பறம்பூரில் உள்ள ஸ்ரீசுதர்மசாகர் சமணர் கோவில் முன்பு தரையில் அமர்ந்து அபிநந்தனுக்காக தியானம் மேற்கொண்டு பிராத்தனை செய்தார். தொடர்ந்து பொதுமக்கள், அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்பி வர கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்