உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக உடுமலை கவுசல்யா பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2019-02-02 22:15 GMT
நீலகிரி,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் தனது கல்லூரி தோழியான கவுசல்யாவை காதலித்து, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் குடும்பத்தினர் சங்கரை படுகொலை செய்தனர். இதையடுத்து ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யாவுக்கு குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள மத்திய அரசின் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தி என்பவரை 2-வதாக கவுசல்யா திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுசல்யா, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வெலிங்டன் கண்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மத்திய அரசு அலுவலகத்தில் பணியில் இருந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம் ஆகும். எனவே கவுசல்யா பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்