தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கும் தேர்வு முறையை கைவிடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கும் தேர்வு முறையை கைவிட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் முதல் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்தால் மட்டுமே 2-வது தேர்வில் கலந்து கொள்ள முடியும். எஸ்.சி. பிரிவை மாணவன் நெல்சன் பிரபாகர் 47 மதிப்பெண் எடுத்து இருந்தார். 50 மதிப்பெண் எடுத்தால் மட்டும் அவர் இரண்டாவது தேர்வில் கலந்து கொள்ள முடியும். தான் சிறப்பாக தேர்வு எழுதியும் சரியாக மதிப்பெண் வழங்கப்படவில்லை. அதனால் இரண்டாவது தேர்வில் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பினரின் வக்கீல்கள் வாதம் நடந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி மகாதேவன் ‘தவறான விடைக்கு மதிப்பெண்ணை குறைப்பதால் மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பிட முடியாது. இது மாணவர்களின் நம்பிக்கைக்கும், ஊக்கத்துக்கும் எதிராக உள்ளதால் இந்த தேர்வு முறையை கைவிடவேண்டும். சி.பி.எஸ்.இ. இந்த நுழைவு தேர்வை நடத்தும் ஒரு அமைப்பு மட்டுமே என்று கூறப்பட்டது. அதனால் இந்த தேர்வு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகளுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு நகலை சமர்ப்பிக்கும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.