பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தினால் இடைநீக்கம் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை

போலீசார் பலர் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து, அவர்களை இடைநீக்கம் செய்வது குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2019-02-01 23:00 GMT
சென்னை,

காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் உள்ள பணியிடங்களில் வேலை பார்க்கும் தலைமைக் காவலர்கள், 2-ம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், பணியின்போது செல்போன் பயன்படுத்த போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் தடை விதித்திருந்தார்.

ஆனால், அதையும் மீறி போலீசார் பலர் பணியின்போது வேலையில் கவனம் செலுத்தாமல், வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவது என செல்போனில் கவனம் செலுத்தி வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து அந்த போலீசார் கண்காணிக்கப்பட்டதில், அவர்களில் பலர் பணியின்போது செல்போன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது.

33 போலீசார் மீது நடவடிக்கை

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் 13 போலீசார் மீது நடவடிக்கைக்கு உள்ளாகினர். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் 9, விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா 3, திண்டுக்கல் மாவட்டத்தில் 2, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்தது.

இந்த நடவடிக்கை தொடரும் என்றும் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், இந்த அறிவுரையையும் மீறி பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட போலீசாரை இடைநீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்