6 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலைக்கு விடிவு காலம் ஆயிரம்விளக்கு - எல்.ஐ.சி. இடையே இருவழிப்பாதை விரைவில் அமல்
மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆயிரம்விளக்கு-எல்.ஐ.சி. இடையே விரைவில் இருவழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆயிரம்விளக்கு-எல்.ஐ.சி. இடையே விரைவில் இருவழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது. அண்ணாசாலைக்கும் 6 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம் ஏற்பட போகிறது.
மெட்ரோ ரெயில் பணிகள்
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருவதால் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலைகளில் பல்வேறு இடங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருந்தன. இதனால் வாகனங்கள் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை மாற்றுப்பாதைகளில் சுற்றி செல்லும் நிலை இருந்து வருகிறது.
இதனால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட 2009-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் 2 வழி போக்குவரத்து அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆயிரம்விளக்கு-எல்.ஐ.சி.
சென்னையில் நடந்து வந்த மெட்ரோ ரெயில் பணிகளில் முக்கியமாக பூந்தமல்லி சாலையில் நடந்து வந்த பணிகள் முற்றிலும் நிறைவடைந்து இந்த சாலை முழுவதும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதேபோன்று சென்னையில் இதயப்பகுதியான அண்ணாசாலையில் மட்டும் பணிகள் ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கிறது.
இதனால் அண்ணாசாலையில் எல்.ஐ.சி. அருகில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்பவர்கள் ராயப்பேட்டையை சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொழுது போக்கு மையம் ஆகியவற்றுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
அண்ணாசாலை ஒப்படைப்பு
ஏ.ஜி-டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் மொத்தம் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்டிரல் மற்றும் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நலன் கருதி, ரெயில் தண்டவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே கதவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து சுரங்க ரெயில் நிலையத்தில் மின்சார வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள், பயணிகள் அமரும் வசதி உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
அண்ணசாலையில் ஏ.ஜி- டி.எம்.எஸ்.சில் இருந்து அரசினர் தோட்டம் வரை பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யும் நிலைக்கு வந்துள்ளது. இந்த மாதம் 2-வது வாரத்தில் சோதனையை முடித்துக்கொண்டு போக்கு வரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பிறகு அண்ணாசாலையில் ஆயிரம்விளக்கு பகுதியில் இருந்து எல்.ஐ.சி. வரை இரு வழிபாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக போக்குவரத்து சிக்னல்கள், சாலை தடுப்புகள், பாதசாரிகள் நடந்து செல்லும் பாதைகள் முறையாக அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரெயில் பணிக்காக எடுக்கப்பட்ட சாலைகளில் பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் ஏற்கனவே எவ்வாறு இருந்ததோ? அவ்வாறு அமைத்து மீண்டும் காவல் துறையிடம் திரும்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அண்ணாசாலையும் முழுமையாக விரைவில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
விடிவு காலம்
இதுகுறித்து போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் நிறைவடையாமல் எல்.ஐ.சி. - ஆயிரம்விளக்கு இடையே ஒரு வழிப்பாதை தொடர்கிறது.
தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் சாலை ஒப்படைக்கப்பட்ட உடன் மீண்டும் வழக்கமான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பின்னர் அண்ணாசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைத்து வழக்கமான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.
மெட்ரோ ரெயில் நிறுவன பணியின்போது அண்ணாசாலையில் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட பகுதிகளில் இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அகற்றப்பட்ட சாலை தடுப்புகள், உடைக்கப்பட்ட சாலைகள், சிக்னல்கள் போன்றவை புதிதாக அமைக் கப்பட்டு வருகிறது. இதனால் 6 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலைக்கு விடிவு காலம் பிறக்க உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.