திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டிக்கு வாய்ப்பு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சிகள் தீவிரம்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சென்னை,
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தற்போதைய நிலையில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூர் தொகுதிக்கு இம்மாதம் 28-ந்தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 10-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்முனை போட்டி
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான கால அளவு குறைவாகவே இருப்பதால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வேட்பாளர் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதுவரை, திருவாரூர் தொகுதி 13 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில், தி.மு.க. 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 5 முறையும், காங்கிரஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. ஒரு முறை கூட திருவாரூர் தொகுதியில் வெற்றி வாகை சூடியதில்லை.
அ.தி.மு.க.வுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிகள் தான் வெற்றி பெற்ற வரலாறு தமிழகத்தில் ஆண்டாண்டு காலம் இருந்து வந்தது. அது ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலோடு முடிவுக்கு வந்தது. அந்தத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் கூட பெற முடியவில்லை.
இதுபோன்ற நிலையில் தான் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கே இடைத்தேர்தலில் வெற்றி என்ற வரலாற்றை இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், திருவாரூர் தொகுதியில் முதல் வெற்றியை பெறவும் அ.தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது.
வேட்பாளர்கள் யார்?
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில், ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் வேட்பாளராக போட்டியிட்டார். 2-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் 53,107 வாக்குகளை பெற்றார். எனவே, இடைத்தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
அதேபோல், தி.மு.க. சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்தபோது, திருவாரூர் தொகுதி பணிகளை இவர் தான் முன்னின்று கவனித்து வந்ததாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டாலும், கருணாநிதியின் மகள் செல்வியின் பெயரும் அடிபடுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் பெற்ற அதே வெற்றி உற்சாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. அந்தக் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
வலுவான கூட்டணி
தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டிக்கே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்தத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மாசிலாமணி கணிசமான அளவுக்கு 13,158 வாக்குகளை பெற்றார்.
தற்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. இதேபோல், காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தி.மு.க.வுக்கே தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது. இதனால், வலுவான கூட்டணியுடன் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. களம் இறங்குகிறது.
எனவே, இந்த இடைத்தேர்தலில் பரபரப்புக்கு குறைவிருக்காது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சிகள், கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் திருவாரூர், கொரடாச்சேரி, மன்னார்குடி, கோட்டூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன.