குடிசைமாற்று வாரிய வீடுகள் வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கணவருடன் கைது
குடிசைமாற்று வாரிய வீடுகள் வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்த அ.தி. மு.க. முன்னாள் பெண் கவுன்சிலர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.
திருவொற்றியூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் சசிகலா நாகலிங்கம் (வயது 42), அ.தி. மு.க. முன்னாள் கவுன்சிலர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு எண்ணூர், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்புகளில் 800-க்கும் மேற்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளை அரசு ஒதுக்கியது.
இதற்கான கணக்கெடுப்பு பணிகள் அப்போதைய 39-வது வார்டு செயலாளராக இருந்த சசிகலா நாகலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 169 மீனவர்களிடம் குடிசைமாற்று வாரிய வீடுகளை ஒதுக்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சசிகலா வசூல் செய்துள்ளார்.
கணவருடன் கைது
அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் 6 ஆண்டுகள் ஆகியும் வீடுகள் தராமல் இழுத்தடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சசிகலா நாகலிங்கத்திடம் பலமுறை கேட்டும் அவர் பதில் அளிக்காமல் மக்களை அலைக்கழித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவாளி பிரியாவிடம் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி புகார் அளித்தனர். இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கும்படி ரவாளி பிரியா உத்தரவிட்டார்.
இதையடுத்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மீனவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் வாங்கித்தருவதாக கூறி சசிகலாவும், அவரது கணவர் நாகலிங்கமும் சேர்ந்து ரூ.36 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று சசிகலா, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் நாகலிங்கம் (53) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.