பக்ரைன், துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் பக்ரைன் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-04 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

நேற்று அதிகாலை 4.40 மணிக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதில் இருந்து சென்றபோது, அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு இருக்கையின் அடியில் பொட்டலம் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் தங்க கட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடத்தி வந்தது யார்?

இதனையடுத்து அதில் இருந்த ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 965 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே துபாயில் இருந்து வந்த அந்த விமானம் காலை 6.10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.

ஆனால் அதில் தங்க கட்டிகள் சிக்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதால், அந்த விமானத்தால் குறிப்பிட்ட நேரத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல முடியவில்லை. இதனால் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் கால தாமதமாக காலை 7.20 மணிக்கு அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் அதில் டெல்லி செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மற்றொரு விமானம்

இதேபோல் பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த சுப்பிரமணியம்(44) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 6 தங்க மோதிரங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்