தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-12-04 08:19 GMT
சென்னை,

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 18 ஆயிரத்து 600 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்  சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். டாக்டர்களின் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 350 டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 400 டாக்டர்கள் என 750 டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அரசு டாக்டர்களும் தங்கள் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், 70 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருமங்கலத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவர்கள் பணியை செவிலியர்கள் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அரசு  மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் அவதியுற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேட்டூரில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராணிப்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்