சென்னை வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது ‘போக்சோ’ சட்டப்படி நடவடிக்கை
சென்னை வில்லிவாக்கத்தில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கத்தில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் வாசு (வயது 57). இவர், மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஓய்வுபெறுவதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. இதற்கு முன்பு வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகரில் இருட்டான பகுதியில் வைத்து, அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுமிக்கு, சப்-இன்ஸ்பெக்டர் வாசு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் கூச்சல் கேட்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் வாசுவை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, அவர் அருகில் உள்ள சிட்கோ நகர் பகுதிக்கு ஓடினார். ஆனால் பொதுமக்கள் அவரை விடாமல் விரட்டிச்சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வாசுவை, ரோந்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், கடந்த 4 மாதங்களாக அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. சிறுமி தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். ஆனால் அவர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் புகார் கொடுக்க பயந்துபோய் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுமிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல் பரவியதால், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுவை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.