தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித்திட்டம்: “ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை” நிர்வாகிகள் பெயரில் பரபரப்பு அறிக்கை
ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்றும், அது தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டம் என்றும் விடுதலைப்புலிகள் நிர்வாகிகள் பெயரில் பரபரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சட்டத்துறைப் பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி என்ற பெயரில் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்று வெளிவந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்புக்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக, தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும், அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.
எங்கள் ஆயுத மவுனிப்பிற்கு பிறகும், இதுவரை எங்கள் பட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம். எனினும், எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த விடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை. இன்றளவும் எம்மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கே உட்படுத்தப்படுகிறார்கள்.
எங்கள் ஆயுத மவுனிப்பின் 10 வருடங்களுக்குப் பிறகும்கூட புலிகளையும், தமிழீழ மக்களையும் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புபடுத்துவதை காணும்பொழுது, இந்தக் கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜீவ்காந்தி படுகொலைக்கும், எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப்புலிகள் இயக்கம் கூறியிருக்கிறது. கொழும்பில் பி.பி.சி. நிறுவனம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனை பேட்டிகண்டபோது, ‘ராஜீவ்காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ எனத் தெளிவாகக் கூறினார்.
இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி மறைவுக்குப் பின்பும், அவரது புதல்வரான ராஜீவ்காந்தி தமிழீழ விடுதலைப்புலிகளோடு ரகசிய உறவைப் பேணிவந்துள்ளார் என்பதையும் இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறோம். இந்திய அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்ள உறவைத் தகர்த்தெறியும் உற்நோக்கோடு இலங்கை அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை என உறுதியாகக் கருதுகிறோம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ்காந்தி படு கொலைப் பழி உடனடியாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் மீதான களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.