“அனைத்து வழக்குகளையும் விரட்டி விரைவாக முடிப்பேன்” ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி

சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க, சென்னை ஐகோர்ட்டு மூலம் ஒரு வருட காலம் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி கொடுத்தார்.

Update: 2018-12-01 00:00 GMT
சென்னை, 

சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க, சென்னை ஐகோர்ட்டு மூலம் ஒரு வருட காலம் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி கொடுத்தார். சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரட்டி விரைவாக முடிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

ஒரு வருடம் பதவி நீட்டிப்பு குறித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வந்தபோது, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் ரெயில்வே ஐ.ஜி. அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தார். அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வந்தவுடன் அங்கு காத்திருந்த நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஓய்வுபெற இருந்ததால் காலையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பணியாற்றுபவர்களும், ரெயில்வே துறையில் பணியாற்றுபவர்களும் என்னை வந்து பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. நான் முழு மனநிறைவோடு பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தநிலையில் ஐகோர்ட்டு அளித்துள்ள இந்த தீர்ப்பு எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது ரெயில்வே ஐ.ஜி. பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்.

ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். ஏற்கனவே ரெயில்வே ஐ.ஜி. பதவியோடு, சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தேன்.

ஒரு வருடம் 4 மாதங்கள் இந்த கூடுதல் பொறுப்பை கவனித்து வந்துள்ளேன். ரெயில்வே ஐ.ஜி. பதவிக்காக மட்டுமே நான் சம்பளம் பெற்று வந்தேன். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொறுப்பை கூடுதலாக கவனித்ததற்கு நான் சம்பளம் எதையும் பெறவில்லை.

நான் இனிமேல் சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. திருச்சியிலும், கும்பகோணத்திலும் உட்கார்ந்து சிலை கடத்தல் வழக்குகளை முழுமையாக விசாரிப்பேன்.

விரட்டி விரைவாக செயல்பட்டு ஒரு வருட காலத்திற்குள் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் விசாரித்து முடிப்பேன். ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் வரவேண்டியுள்ளது. அதை மீட்கும் பணியில் ஈடுபடுவேன். மேலும் ஒரு சிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள சிவன் கோவிலில் ரூ.30 கோடி மதிப்புள்ள சிலை திருட்டு போயிருக்கிறது. அதுபற்றி விசாரணை நடத்துவேன். இந்த பொறுப்பு சாதாரண பொறுப்பு அல்ல. சிலை கடத்தல் தொடர்பாக நடந்த குற்றங்கள் தற்போது நடந்தது அல்ல. 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றங்கள் ஆகும்.

அப்போது நான் பணியில்கூட சேரவில்லை. இவற்றில் எந்த வழக்கிலும் ‘எப்.ஐ.ஆர்.’கூட பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் திருட்டுபோன பழங்கால சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எடுத்த முயற்சியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு இல்லையென்றால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இல்லை.

தமிழக அரசோ, அரசியல் வாதிகளோ எனக்கு பிரச்சினை இல்லை. சில அதிகாரிகள்தான் பிரச்சினை. எனது அதிகாரத்துக்குட்பட்டு ஐகோர்ட்டு மற்றும் அரசுக்கு கட்டுப்பட்டு, சட்டத்திற்கு கட்டுப்பட்டு எனது பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்வேன்.

எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. தமிழக போலீஸ் துறையில் எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் பணியாற்றி உள்ளனர். பரம்வீர் சிங் என்ற அதிகாரி சி.பி.ஐ.-ல் பணியாற்றினார். தலைசிறந்த நேர்மையான அதிகாரி ஆவார்.

மனோகரன், வால்டர் தேவாரம் போன்ற தலைசிறந்த அதிகாரிகள் பணியாற்றி உள்ளனர். அவர்கள் எல்லாம் என்னுடன் தொடர்பில் உள்ளனர். என்னுடன் பணியாற்றிய சக போலீஸ் அதிகாரிகளை நான் மதிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து என்னோடு பணியாற்றுவார்கள்.

அவர்களை எள்ளளவும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. பிரிக்கவும் விடமாட்டேன். எனது பணியில் நான் யாரையும் தண்டிக்கவில்லை. ‘சார்ஜ்மெமோ’ கூட கொடுத்தது இல்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை. மிரட்டி, உருட்டி வேலைதான் வாங்குவேன். உங்கள் அனைவரது வாழ்த்துகளால் நான் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்