சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவு ரத்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நீட்டிப்பு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிலைகடத்தல் தடுப்பு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்துள்ள ஐகோர்ட்டு, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்த காதர்பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவர் சிலைகடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அவரை திடீரென ரெயில்வே ஐ.ஜி.யாக பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்து கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார், சிலைகடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளையும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதையடுத்து, சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மட்டும், பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள் என்றும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்த நிலையில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளும் எதிர்காலத்தில் பதிவாகும் புதிய வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. பின்னர், இதுதொடர்பாக அரசாணையை கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை, ஐகோர்ட்டு அமைத்தது.
இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது. இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று மதியம் தீர்ப்பு வழங்கினர்.
அதாவது, டிவிசன் பெஞ்சில் இடம் பெற்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை ஐகோர்ட்டிலும், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் உள்ளதால், இந்த தீர்ப்பை காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர்.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-
கடத்தப்பட்ட சிலைகள் எல்லாம் பல்வேறு நாடுகளில் உள்ளன. இதை மீட்கவேண்டும் என்றால், சி.பி.ஐ. விசாரித்தால்தான் சரியாக இருக்கும் என்று தமிழக அரசு காரணம் கூறுகிறது.
ஆனால், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் போலீசார், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 10-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளனர். சிலைக்கடத்தல் வழக்கில் 47 பேரை கைது செய்துள்ளனர். ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு சிலைகடத்தல் பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த 28 ஆண்டுகளில் இந்த பிரிவு போலீசார் செய்த பணியை, பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், ஒரு ஆண்டிலேயே முறியடித்து விட்டனர்.
சமீபத்தில் கூட வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 250-க்கும் மேற்பட்ட சிலைகளை, அவர் பறிமுதல் செய்துள்ளார். அவரது பணியை சுப்ரீம் கோர்ட்டும் பாராட்டியுள்ளது. எனவே, இந்த வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டியதற்கான சரியான காரணங்களை தமிழக அரசு கூறவில்லை. சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளின் விவரங்களையும், ஆவணங்களையும் உயர் அதிகாரிகளுக்கு பொன் மாணிக்கவேல் தருவது இல்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.
ஆனால், ஐகோர்ட்டு உத்தரவின்படி நியமிக்கப்பட்ட அதிகாரி, வழக்குகளின் விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு தரவேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும், புலன்விசாரணை முடிவடைவதற்கு முன்பே, அதன் விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டியது இல்லை. அவ்வாறு தெரியப்படுத்தினால், புலன் விசாரணை பாதிக்கப்படுவதுடன், குற்றவாளிகளை போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வைத்துவிடும்.
மேலும் மனுதாரர் யானை ராஜேந்திரன், தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் சிலரை காப்பாற்றுவதற்காகவே, பொன் மாணிக்கவேலை இடம் மாற்றம் செய்தனர் என்று குற்றம் சாட்டுகிறார்.
சிலைகடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணமே, இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் ஜெயா என்ற அதிகாரிதான். பொன் மாணிக்கவேலின் புலன் விசாரணையில், தனக்கு கீழ் பணியாற்றும் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்த ஆணையர் ஜெயா, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார். டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.கள், ஆணையர் ஜெயா ஆகிய 4 அதிகாரிகள்தான், சி.பி.ஐ.யிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளனர்.
எனவே, சிலைகடத்தல் வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணையை ரத்து செய்கிறோம். அதேநேரம், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்புப்படையின் புலன்விசாரணை எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. எனவே, கீழ்க் கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம்.
நவம்பர் 30-ந்தேதி (நேற்றுடன்) ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஒரு ஆண்டுக்கு நியமிக்கிறோம். அந்த பதவியை அவர் உடனடியாக ஏற்கவேண்டும். இதுவரை இந்த தனிப்பிரிவில் அவர் பயன்படுத்தி வந்த அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவருக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்.
ஒருவேளை இந்த அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசு காலதாமதம் செய்தால், அதற்காக பொன் மாணிக்கவேல் பதவி ஏற்காமல் காலதாமதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் தன்னுடைய புலன்விசாரணை பணியை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
இந்த சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவில் இடம் பெற்றுள்ள போலீசார், தொடர்ந்து பணியாற்ற வேண்டும். பொன் மாணிக்கவேல், இதுவரை எவ்வளவு ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை பெற்றாரோ, அதை தொடர்ந்து அவருக்கு அரசு வழங்கவேண்டும். அவர் தன்னுடைய புலன்விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் சம்பந்தப்பட்ட கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யும்போது, புலன்விசாரணையின் நிலை குறித்து இந்த ஐகோர்ட்டு தெரிந்து கொள்ள முடியும்.
சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை பதிவான வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் என்பது அல்ல. எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் புதிய வழக்குகளையும் அவர்தான் விசாரிக்கவேண்டும்.
இவருக்கு, மத்திய அரசும், சி.பி.ஐ.யும் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இந்த தனிப்படையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள், போலீசார் மீது எந்த ஒரு நடவடிக்கையையும், இந்த ஐகோர்ட்டின் அனுமதியின்றி தமிழக அரசு எடுக்கக்கூடாது. இவர்களுக்கு எதிராக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால், அவற்றை இந்த ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்.
இந்த தனிப்படைக்கு தேவையான நிதியினை தமிழக அரசு தங்குதடையின்றி வழங்கவேண்டும். இதற்காக ஒரு தனி நிதி பிரிவை அரசு உருவாக்கவேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தையும் தமிழக அரசு தாமதமின்றி உனடியாக அமல்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது என்று கூறி அரசாணையை வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அதுவும், ஐ.ஜி., அந்தஸ்தில் வகிக்க வேண்டிய இந்த பதவியை, கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால், எங்களை (நீதிபதிகளை) பொறுத்தவரையில், சிலைகடத்தல் வழக்குகளை எல்லாம் ஒரே நாளில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததே, அதேபோல இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அந்தஸ்தில் வகித்து வந்த பதவியை கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு மாற்றி, அந்த பதவிக்கு அவசர கதியில் அபய்குமார் சிங்கை நியமித்து கடந்த 29-ந்தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும், சிலை கடத்தல் வழக்குகளை, பொன்மாணிக்கவேல் தலைமையில் இந்த ஐகோர்ட்டு உருவாக்கிய தனிப்படை போலீசார் தான் விசாரிக்கவேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.