கோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போலீஸ் விசாரணையின்போது அதிகாரி சாவு

கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன ஆய்வாளரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2018-11-01 23:00 GMT
கோவை,

கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் சென்றனர். வந்திருப்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. போலீசார் வேனில் இருந்து இறங்கியவுடனே சிலர் வாகன ஆய்வாளர் அறைக்கு சென்றனர்.

ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அலுவல் நிமித்தமாக வந்த பொதுமக்களை மட்டும் வெளியே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

வாகன ஆய்வாளர்களின் அறைகள், அலுவலக ஊழியர்களின் அறைகள் உள்பட அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மதியம் 2.30 மணியளவில் அங்கு பணியாற்றிய வாகன ஆய்வாளர் பாபுவிடம் (வயது 52) போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்தியதும் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் சிலரும் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பாபுவின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி. இவரது மகன் சென்னையில் பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்