சிறுமி பலாத்கார வழக்கில் கைதானவர்கள் சி.பி.ஐ. விசாரணை கோரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவர்கள் சி.பி.ஐ. விசாரணை கோரி தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2018-10-31 23:47 GMT
சென்னை,

சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளானார். அவரை அந்த குடியிருப்பில் வேலை செய்த காவலாளிகள், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமியிடம் அவளது அக்கா விசாரித்தபோது தான் இந்த கொடூர சம்பவம் தெரியவந்தது. இதுபற்றி அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கைதானவர்களில் 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.

அப்போது போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ் ஆஜராகி, ‘வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு மனுதாரர்கள் சரியான காரணத்தை கூறவில்லை. அயனாவரம் போலீசார் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டவில்லை. போலீசார் நியாயமான முறையில் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர்’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ‘மனுதாரர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்கள் எல்லாம் வழக்கின் விசாரணையின்போது அவர்கள் தெரிவிக்க வேண்டியவை. இந்த வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை‘ என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்