இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 82.41 ஆக விற்பனை

இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது.

Update: 2018-09-04 02:07 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.   பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டதால் விற்பனை விலை சற்று குறைந்தது.  இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று நேற்று முன்தினம் 74 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை ஆனது.

பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகள் வரலாறு காணாத இந்த விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசல் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது ஒன்றே இந்த விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள், பொருளாதார வல்லுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்