தனியார் பள்ளியில் மாணவிகளை சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு
சேலத்தில் ஒரு தனியார் பள்ளியில் மாணவிகளை சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு செருப்படி விழுந்தது. போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கணித ஆசிரியர் சதீஷ் (வயது 24) கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதுடன், சில்மிஷமும் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவி களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் சதீஷ் தொடர்ந்து மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரம் அடைந்த பெற்றோர், சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சதீஷை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே இழுத்துவந்து சிலர் கடுமையாக தாக்கினர். பெண்கள் தங்களது செருப்புகளை கழற்றி அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில் ஆசிரியர் சதீஷ் மயக்கம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த அந்த ஆசிரியர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.