வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 6 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2018-08-31 20:11 GMT
வேலூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 66). இவருடைய மகன் கோபால கிருஷ்ணன் (35) லாரி டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 23). 2015-ம் ஆண்டு நடந்த 6 வயது சிறுமி கொலை வழக்கில் முத்துலட்சுமிக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 10-ந் தேதி முத்துலட்சுமி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது முத்துலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த 21-ந் தேதி பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆண் குழந்தை பிறந்தது

அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. முத்துலட்சுமிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது என்பதால் இம்முறையும் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு முத்துலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை 2.8 கிலோ எடை இருப்பதாகவும், தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு சென்று முத்துலட்சுமியையும், குழந்தையையும் பார்த்து சென்றனர்.

மாமனாருடன் கள்ளக்காதல்

கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவி தீபா. இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தாள். 2011-ம் ஆண்டு தீபா இறந்துவிட்டதால் முத்துலட்சுமியை 2-வது திருமணம் செய்துகொண்டார். கோபால கிருஷ்ணன் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார். இதனால் அவருடைய தந்தை பழனிக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துவந்தனர்.

இதற்கு 6 வயது சிறுமியால் இடையூறு ஏற்படும் என்று மாமனார் பழனியிடம், முத்துலட்சுமி கூறியிருக்கிறார். இதனால் சிறுமியை கொலைசெய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று இரவு தனது பேத்தி என்றுகூட பார்க்காமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று பழனி பாலியல் பலாத்காரம் செய்தார்.

கிணற்றில் வீசி கொலை

இதில் மயக்கமடைந்த சிறுமியை முத்துலட்சுமி ஒரு துணியில் சுற்றிக்கொடுக்க, பழனி கிணற்றில் வீசி கொலை செய்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, முத்துலட்சுமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோட்டில் நடைபெற்றது.

இதில் பழனிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் செய்திகள்