சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கைது துப்பாக்கி-சொகுசு கார் பறிமுதல்
சென்னையை கலக்கிய ரவுடி சி.டி.மணி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகளுடன், 15-க்கும் மேற்பட்ட வாரண்டுகளுடன் போலீஸ் கையில் சிக்காமல் தொடர்ந்து சென்னையை கலக்கி வந்தவர் பிரபல ரவுடி மணி என்ற சி.டி.மணி (வயது 43). இவர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் மட்டும் 3 கொலை வழக்குகள் உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, அடையாறு, மாம்பலம், கே.கே.நகர், பாண்டிபஜார், குமரன்நகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் உள்ளன. சமீபகாலமாக ஆள்கடத்தல், கட்ட பஞ்சாயத்து, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர் மீது கூறப்பட்டு வந்தது. இவருக்கு பக்கபலமாக சில போலீஸ் அதிகாரிகள் பின்னணியில் இருப்பதால் இவரை கைது செய்ய முடியவில்லை.
இவர், சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் வசித்து வந்தார். ஆரம்ப காலத்தில் மாம்பலத்தில் சி.டி. வியாபாரம் செய்தார். இதனால் இவரை சி.டி.மணி என்று நண்பர்கள் அழைத்தனர். போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக வலம் வந்த சி.டி.மணியை கைது செய்தே தீரவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதன்பேரில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், கவுதம் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை படை ரகசியமாக அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் சி.டி.மணியை ரகசியமாக தேடி வந்தனர்.
நேற்றுமுன்தினம் இரவு சி.டி.மணி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திண்டிவனம் நோக்கி சொகுசு காரில் செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் சி.டி.மணியை ஸ்ரீபெரும்புதூர் அருகே சுற்றி வளைத்தனர். ஆனால் போலீஸ் கையில் சிக்காமல் அவர் காரில் தப்பி சென்றார்.
சினிமா பாணியில் போலீசார் அவரை காரில் விரட்டி சென்றனர். சி.டி.மணி திடீரென்று திண்டிவனத்துக்கு போகாமல் முட்டுக்காடு பகுதிக்கு சென்றார். முட்டுக்காடு பகுதியில் வைத்து சி.டி.மணியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சி.டி.மணி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக தெரிகிறது. உடனே தனிப்படை போலீஸ் அதிகாரிகளும் துப்பாக்கி களை தூக்கி சுட்டு விடுவோம் என்று எச்சரித்தனர். அதன்பிறகு சி.டி.மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். காரில் அவருடன் பயணித்த வினோத், ஹரிஹரன், சுரேஷ் என்ற சொறி சுரேஷ், இளங்கோ, மாதவன், சிவகுமார் ஆகிய கூட்டாளிகள் 6 பேரும் பிடிபட்டனர்.
சி.டி.மணி வைத்திருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் துப்பாக்கி தோட்டாக்கள், பட்டாகத்திகள், வெள்ளை நிற சொகுசு கார், புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சி.டி.மணி மற்றும் அவரது கூட்டாளிகளை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
பின்னர் சி.டி.மணி மற்றும் கூட்டாளிகள் கானாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கானாத்தூர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பார்கள் என்று நேற்று இரவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் மாம்பலத்தில் தொழில் அதிபர் ஒருவரை துப்பாக்கியை காட்டி சி.டி.மணி மற்றும் அவரது கூட்டாளிகளும் மிரட்டியதாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புதிய புகார் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.