தமிழகத்தை காஷ்மீராக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தை காஷ்மீராக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

Update: 2018-05-26 20:00 GMT
சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. தோழமை கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்று உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதுதான் ஒரே கோரிக்கையாகும்.

இதில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடாமல் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தூத்துக்குடியில் நடந்த வெறியாட்டத்தில் பலியான மக்களின் கனவை நினைவாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும்.

தூத்துக்குடியில் பதற்றம் குறையவில்லை. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வேல்முருகன் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு இருப்பது பாசிச அடக்குமுறையாகும். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல தலைவர்களுக்கு கடமை உண்டு. அந்த சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போலீசார் ஈடுபட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது.

தூத்துக்குடியில் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்கவேண்டும். அங்கு மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப 144 தடை உத்தரவை திரும்ப வேண்டும். மக்களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

பெரிய வாக்குறுதிகளுடன் தேர்தலை சந்தித்து மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிய மோடி, ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் நேர் எதிர்மறைவாகிவிட்டது. எப்போது ஆட்சி முடியும் என்று மக்கள் காத்திருக்கும் நிலையில் அராஜக ஆட்சியை கடந்த 4 ஆண்டுகளில் நடத்தி உள்ளனர். எங்கு பார்த்தாலும் வன்முறைகள், பொருளாதாரம் வீழ்ச்சி என பாரதீய ஜனதா கட்சியினரே விமர்சிக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி பல்வேறு சதித்திட்டங்களை செய்து வருகிறார். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கு பல சான்று உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது.

எல்லையோர பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி கலவரத்துக்கு மத்தியஅரசுதான் காரணம். தமிழகத்தை காஷ்மீராக மாற்றுவதற்கு மத்திய பாரதீய ஜனதா அரசு முயற்சிக்கிறது. முதல்–அமைச்சருக்கே தெரியாமல்தான் தூத்துக்குடி சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்