தூத்துக்குடி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 74 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.
எனினும் பேரணி ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி சென்றது. அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 65 பேரை சொந்த ஜாமீனில் விடுவிப்பதற்கு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் 74 பேரை விடுவிக்க மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது.