மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஒருங்கிணைப்பு மையங்கள் பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு தொடங்க ஏற்பாடு
மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை கடற்கரை சாலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உள்ளது. இந்த மன்றம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கல்வியில் தரமேம்பாடு செய்யவும், சிறந்த மாணவர்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள கலாசாரம், கல்வி முதலியவற்றை கற்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் கண்காணித்தும் வருகிறது.
சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளன.
அதன்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலை அதிகாரிகள் அடிக்கடி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கின்றனர்.
இதற்காக 6 பல்கலைக்கழகங்களிலும் வர்த்தக ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களால் ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்க இந்த மையங்கள் ஏற்பாடு செய்யும். இந்த பல்கலைக்கழங்கள் மேலும் பல புதிய தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் செய்து வருகிறது.